சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 700ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தியது 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பின்னர் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்த்தினார்.
Also Read
பின் உஸ்மான் கவாஜா 232 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் இலங்கை அணியின் திமுத் கருணரத்னேவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். அதிலும் குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் இந்த சாதனையை தனது பிறந்த நாளன்று படைத்துள்ளார். இதுதவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைக்கும் 4ஆவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகின் 18ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுநாள் வரை ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சேர்த்து 287 போட்டிகளில் 373 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாமப்வான் வாசிம் அக்ரம் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சமிந்தா வாஸுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இந்த எண்ணிக்கையை எட்டிய மூன்றாவது இடது கை வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய ஆறாவது பந்து வீச்சாளர் என்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீயின் சாதனையையும் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். முன்னதாக பிரெட் லீ 381 இன்னிங்ஸ்களில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், மிட்செல் ஸ்டார்க் 373 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 308 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- 308 - முத்தையா முரளிதரன் (இலங்கை)
- 351 - ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
- 354 - ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா)
- 355 - வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்)
- 358 - கிளென் மெக்ராத்(ஆஸ்திரேலியா)
- 373 - மிட்செல் ஸ்டார்க்*(ஆஸ்திரேலியா)
- 381 - பிரெட் லீ(ஆஸ்திரேலியா)
- 382 - வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
- 389 - அனில் கும்ப்ளே (இந்தியா)
Win Big, Make Your Cricket Tales Now