-mdl.jpg)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் பெரிதளவில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா முதல் நான்கு பந்துகளில் 2 ரன்களை எடுத்த நிலையில் 5ஆவது பந்தில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் இந்த போட்டியிலும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.