
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. மழை காரணமாக 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் லியாம் லிவிங்ஸ்டோனும் சிக்ஸர் மழை பொழிந்ததுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 312 ரன்களைக் குவித்து அசத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹாரி ப்ரூக் 87 ரன்களையும், பென் டக்கெட் 63 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 62 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரகள் டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 28 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.