
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர்.
இதில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடி வந்த மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இறுதிசெய்யப்பட்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு துணைக்கேப்டனாக டிராவிஸ் ஹெட் நியமிக்கப்பட்டுள்ளார்.