
டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (அக்.16) முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைப்பதற்காக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தலா 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் போராடி தோற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை இழந்து தலை குனிந்தது.
உலக கோப்பை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இப்படி கடைசி நேரத்தில் தங்களது அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்வியுள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று கான்பெரா நகரில் நடைபெற்றது. மழையின் குறுக்கீட்டால் தலா 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லருடன் 2ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 4 பவுண்டரியுடன் 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65* (41) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் பினிசிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் இங்கிலாந்து 112/2 ரன்கள் சேர்த்தது.