எம்எல்சி 2023: பூரன் அபார சதம்; சியாட்டிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சியாட்டில் அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் நௌமன் அன்வர் 9, ஜெயசூர்யா 16, ஹென்ரிச் கிளாசென் 4, ஷுபம் 29 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டி காக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சியாட்டில் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்திருந்தது. நியூயார்க் தரப்பில் டிரெண்ட் போல்ட், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூயார்க் அணியில் ஸ்டீவர் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தனி ஒருவனாக போராடி சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளினார்.
இப்போட்டியில் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், போட்டியின் இறுதிவரை களத்தில் இருந்து 55 பந்துகளில் 13 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என 137 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய பிரீவிஸ் 20 ரன்களையும், டிம் டேவிட் 10 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சீயாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now