
அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் வீரர்கள் டெவால்ட் ப்ரீவிஸ், ஜஹாங்கீர்,மொனான்க் படேல், அசாம், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும், நிக்கோலஸ் பூரன் 37 பந்தில் 38 ரன், டிம் டேவிட் 21 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன் நியூயார்க் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. எல்கேஆர் அணி தரப்பில் அலி கான், கோர்ன் டிரை, ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.