
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லஹிரு மிலந்தா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - டேவிட் மில்லர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து, மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அரைசதம் அடித்த முதலிரண்டு வீரர்கள் என்ற சாதனையையும் படைத்தனர். பின் 55 ரன்களில் கான்வே விக்கெட்டை இழக்க, 61 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லரும் ஆட்டமிழந்தார். இறுதில் சாண்ட்னர், பிராவோ ஆகியோர் ஒருசில பவுண்டரிகளை விளாசி அணிக்கு உதவினர்.