
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் - சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மோரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஆலனுடன் இணைந்த மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த மேத்யூ ஷார்ட் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ், கேப்டன் கோரி ஆண்டர்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஹசன் கான் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. சியாட்டில் ஆர்காஸ் அணி தரப்பில் கேமரூன் கேனன் 3 விக்கெட்டுகளையும், இமாத் வசீம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ரியான் ரிக்கெல்டன் - ஷெஹான் ஜெயசூர்யா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.