
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன். மேத்யூ ஷார்ட், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஜோஷ் இங்கிலிஸ், ஷெர்ஃபேண்ட் ரூதர்ஃபோர்ட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் யூனிகார்ன்ஸ் அணி 33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஹசன் கான் - கேப்டன் கோரி ஆண்டர்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களை எடுத்திருந்த ஹசன் கான் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கோரி ஆண்டர்சன் அரைசதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அனி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தரப்பில் நஸ்தும் கெஞ்சிகே, டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியில் ருபென் கிலிண்டன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.