
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறக்கிய வாஷிங்டன் அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்த நிலையில், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் 15 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஒபுஸ் பினார் அதிரடியாக விளையாடியது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை.