
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குவாஃபையர் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஃபின் ஆலன் 6 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் 8 ரன்களிலும், ரூதர்ஃபோர்ட் 6 ரன்களுக்கும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, யூனிகார்ன்ஸ் அணி 66 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஹசன் கான் - கோரி ஆண்டர்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் கான் தனது அரைசதத்தைக் கடந்தார்.
ஆனால் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த கோரி ஆண்டர்சன் 26 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய பாட் காம்மின்ஸ், ஹாரிஸ் ராவுஃப், கார்மி ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அரைசதம் கடந்து விளையாடி வந்த ஹசன் கானும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.