
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வாஷிங்டன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் மற்றும் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த டிராவிஸ் ஹெட் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 15 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திராவும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 59 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃபிரீடம் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியஸ் நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான், கேப்டன் கீரென் பொல்லார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.