
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: உன்முக்த் சந்த் மற்றும் சைஃப் பதரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் சியாட்டில் ஆர்கஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ரஸ் அணிகளுக்கு இடையேயான எல்எல்சி லீக் போட்டி இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணிக்கு ஷியாம் ஜஹாங்கீர் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜஹாங்கீர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கைல் மேயர்ஸ் 14 ரன்னிலும், கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 4 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 44 ரன்களைச் சேர்த்த கையோடு ஆரோன் ஜோன்ஸும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், கோர்ன் ட்ரை, வான் ஷால்விக் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.