
MLC 2025 Challenger: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் சுற்று போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் நடப்பு சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஸ்மித் படேல் 9 ரன்களுக்கும், சாய்ஜேதா முக்காமல்லா ஒரு ரன்னிலும், ஷுப்மன் ரஞ்சனே ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் அரைசதம் கடந்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 59 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 85 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த அகீல் ஹொசைன் மற்றும் டோனவன் ஃபெரீரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.