
டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.
எம்ஐ நியூயார்க் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் டிம் செஃபெர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டிம் செஃபெர்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மெக்குர்க்கும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 91 ரன்களை சேர்த்த நிலையில் மேத்யூ ஷார்ட்டும், ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் மெக்குர்க்கும் விக்கெட்டை இழக்க, இறுதியில் கிருஷ்ணமூர்த்தி 27 ரன்களையும், ஹசன் கான் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களைச் சேர்த்தது.