எம்எல்சி 2025: நூர் அஹ்மத் அபார பந்துவீச்சு; நைட் ரைட்ர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

மேஜர் லீக் கிரிக்கெட் 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நைட் ரைடர்ஸை வீழ்த்தியதுடன் நடப்பு சீசனில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
எம்எல்சி என்றழைக்கப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் டூ பிளெசிஸ் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சாய்தேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் டெவான் கான்வே 34 ரன்களிலும், சாய்தேஜா 31 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து ஷுபமும் 24 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 36 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், ஷாட்லி வான் ஷால்க்விக், ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ் 25 ரன்களுக்கும், உன்முக்த் சந்த் 22 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரே ரஸல் ஒரு ரன்னிலும், கேப்டன் சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் ஷாட்லி வான் ஷால்க்விக் 27 ரன்களையும், அலி கான் 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, ஸ்டீபன் விக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now