MLC 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்குக்கும் முக்கிய காரணமாக அமைந்தார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய சமித் படேல் 3 ரன்னிலும், சாய்தேஜா முக்காமல்லா 25 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்னர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த கையோடு ஃபெரீராவும் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தியதுடன் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 103 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ருஷில் உகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.