
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது அமீர், டி20யில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார். அதன்படி இத்தொடரின் 13ஆவது போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீர் 2.3 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் போது அவர் மெய்டன் ஓவரையும் வீசினார்.
இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் 286 டி20 இன்னிங்ஸ்களில் 24 மெய்டன் ஓவர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதேசமயம் முகமது அமீர் 302 இன்னிங்ஸ்களில் 25 மெய்டன் ஓவர்கள் வீசி தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அதேசமயம் இந்த பட்டியளில் வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்டில் 522 இன்னிங்ஸ்களில் 30 மெய்டன் ஓவர்கள் வீசி முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் 444 இன்னிங்ஸ்களில் 26 மெய்டன் ஓவர்கள் வீசி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் அமீர், நரைன் மற்றும் ஷாகிப் ஆகியோர் உலகம் முழுவதும் டி20 லீக் விளையாடி வரும் நிலையில், புவனேஷ்வர் குமார் இந்தியாவில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.