
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வகித்த ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் முகமது நபி தனது ஓய்முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தகையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.