
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தியதுடன், விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வான் (67 ) மற்றும் ஃபகர் ஜமான் (55) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (39) ஆகியவற்றால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது.