
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெங்கால் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹரியானா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஹரியானா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த பார்த் வாட்ஸ் - நிஷாந்த் சிந்து இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்த, ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 64 ரன்களையும், பார்த் வாட்ஸ் 62 ரன்களையும் சேர்த்தனர். பெங்கால் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்கால் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் போரல் 57 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுதிப் குமாரும் 36 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.