Advertisement
Advertisement
Advertisement

யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2024 • 22:08 PM
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த வருடத்திலிருந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013 – 2023 வரையிலான காலகட்டங்களில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோஹித் சர்மா மும்பையை வெற்றிகரமான அணியாக மாற்றினார்.

இருப்பினும் அந்த நன்றியை மறந்த மும்பை நிர்வாகம் அவரை கழற்றி விட்டது அந்த அணி ரசிகர்களிடமே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் 2016 முதல் 2021 வரை மும்பை அணியில் வளர்க்கப்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமான ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக உருவெடுத்தார். இருப்பினும் அவரை 2022 சீசனில் மும்பை கழற்றி விட்ட போது 15 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் நிர்வாகம்  கேப்டனாகவும் அறிவித்தது.

Trending


அந்த வாய்ப்பில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா 2ஆவது வருடம் குஜராத்தை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்துக்கு கடைசி வரை அவர் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நம்பினர். இருப்பினும் சற்று அதிகமாக பணம் கிடைக்கும் என்பதற்காக தம்மை கேப்டனாக உருவாக்கிய குஜராத்தையும் சொந்த மாநிலத்தையும் மறந்த பாண்டியா தற்போது மும்பையை வழி நடத்த உள்ளார்.

இதனால் பாண்டியாவுக்கு விஸ்வாசம் முக்கியமல்ல பணம் தான் முக்கியம் என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் குஜராத் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஷமி, “யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களுக்கு அணியின் சமநிலை தான் முக்கியம். எங்களின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா 2 சீசன்களிலும் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று 2022இல் கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் குஜராத்துக்காக வாழ்நாள் முழுவதும் விளையாட பாண்டியா ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மும்பைக்கு சென்றது அவருடைய முடிவு. தற்போது கேப்டனாகியுள்ள ஷுப்மன் கில் விரைவில் அனுபவத்தை பெறுவார்.

இருப்பினும் அவரும் ஒருநாள் அணியிலிருந்து விலகலாம். ஏனெனில் விளையாட்டில் இதுவும் ஒரு அங்கமாகும். இங்கே வீரர்கள் வருவார்கள் போவார்கள். நீங்கள் கேப்டனாக இருக்கும் போது அழுத்தத்தை கையாளுவதுடன் உங்களுடைய செயல்பாடுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஷுப்மன் கில் நிறைய சிந்திக்க நேரிடலாம். இருப்பினும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள் என்பதால் அதை பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement