
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றுள்ள நிலையில், நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 25) அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி - ஜார்ஜியா வோல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜார்ஜியா வோல் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 12 ரன்னிலும், கிரேஸ் ஹேரிஸ் 11 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 10 பவுண்டரிகளுடன் 94 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.