
நடப்பு உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதும், அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கான கணிப்புகள் மாற ஆரம்பித்தது. அதன்பின், இங்கிலாந்து அணியை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி வெல்லவும், இந்த கணிப்புகளில் பெரிய அளவு மாற்றம் உருவாக ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைய, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு பெரிய நெருக்கடி உருவானது. இப்படியான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததும், பின்னடைவில் இருக்கின்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அரை இறுதி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்க அணி கையில் இருந்த ஒரு நல்ல வாய்ப்பை நெதர்லாந்து மாதிரியான ஒரு அணியிடம் தோற்று கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக அமைகிறது. இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.