
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இந்த போட்டியைக் காண பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் துபாய்க்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் இந்திய அணிக்கு உள்நாட்டிலிருந்தும் நிறைய ஆதரவு கிடைத்து வருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதரவும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
தற்போது, எம்எஸ் தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஆகியோர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து அணிக்கு ஆதரவாக தெரிவிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இருவரும் தற்போது படப்பிடிப்பு தளத்தில் உள்ள நிலையில், அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியை தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்து வருகின்றனர்.