
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 40 வயதை எட்டிவிட்ட தோனி, மைதானத்தில் எப்படி செயல்படுவார், அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது.
அதைக் கடந்து கடைசியாக சென்னையின் நாயகனை ஒரு முறை களத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் கடைசி முறை தோனி சிரிப்புடனும், கோப்பையுடனும் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை அணியின் வீரர்களும் பேசி வருகின்றனர். ஏனென்றால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் தோனி இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. அதன் பின்னர் கரோனா வைரஸ் பரவலின் போது, சுதந்திர தினத்தின்று ஓய்வை அறிவித்தார். இருப்பினும் தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி வெளிப்படையாக அறிவித்தார்.