
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 11 ரன்களி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 26 ரன்களைச் சேர்த்திருந்த சுனில் நரைனும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஆங்கிரிஷ் ரகுவன்ஷியும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தோனியின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் இப்போட்டியில் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் கேட்சை சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 200ஆவது டிஸ்மிஸலை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலற்றில் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிசல்களைச் செய்த முதல் வீரர் எனும் சாதனையை எம் எஸ் தோனி படைத்துள்ளார். இதில் அவர் 153 கேட்சுகளையும், 47 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.