ஐபிஎல் தொடரில் சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிகவும் வயதான வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் 26 ரன்களையும், ஃபீல்டிங் போது சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
Also Read
ஃபீல்டராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
அதன்படி இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 271 போட்டிகளில் விளையாடிவுள்ள எம் எஸ் தோனி தனது 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியல்..,
- 201* - எம்.எஸ். தோனி
- 182 - தினேஷ் கார்த்திக்
- 126 - ஏபி டி வில்லியர்ஸ்
- 124 - ராபின் உத்தப்பா
- 118 - விருத்திமான் சஹா
- 116 - விராட் கோலி
ஆட்டநாயகன்
இதுதவிர்த்து இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆட்டநயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். அவர் இந்த விருதை 43 ஆண்டுகள் மற்றும் 280 நாட்களில் பெற்றார். முன்னதாக இந்திய வீரர் பிரவீன் தம்பே 42 வயது 208 நாட்களில் ஆட்டநயகான் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது தோனி முறியடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு தலைமை தாங்கிய மிகவும் வெற்றிகரமான வயதான வீரர் எனும் பெருமையையும் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். இது தவிர, ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கின் போது அதிக முறை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற சாதனையையும் தோனி வைத்திருக்கிறார். வெற்றிகரமான ரன் சேஸிங்கில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் துபே 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களையும், தோனி 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்க்க, சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now