
ஐபிஎல் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்ததுடன், ரசிர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியுடன் சிஎஸ்கேவின் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறவுள்ளதாகவும் வதந்திகள் பரவின. மேற்கொண்டு இப்போட்டியை காண மகேந்திர சிங் தோனியின் பேற்றோர்களும் மைதானத்திற்கு நேரில் வருகை தந்ததன் காரணமாக இத்தகவல் உண்மை என்றும் கூறப்பட்டது. ஏனெனில் அவரின் பேற்றொர்கள் இதுவரை எந்தவொரு போட்டியின் போதும் மைதானத்திற்கு வருகை தந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், போட்டிக்குப் பிறகு, தோனி தனது ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், தோனியின் ஓய்வு முடிவு குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் மகேந்திர சிங் தோனியும் நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் தனது ஓய்வு முடிவு குறித்து யோசிப்பதாகவும், அதற்கு இன்னும் 12 மாத அவகாசம் இருப்பதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.