
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக வீரர்கள் தற்போதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த எம் எஸ் தோனி, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியது மட்டுமின்றி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 14 முறை வழிநடத்தியுள்ள தோனி 5 முறை கோப்பையை வென்று கொடுத்து, அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தற்போது 42 வயதை எட்டியுள்ள எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக 6ஆவது முறையாக கோப்பையை வென்று கொடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.