
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இளம் வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் சில தினங்களுக்கு முன் ஆர்சிபி அணி வீரர்களும் இப்போட்டிக்காக சென்னை வந்து தங்களது பயிற்சிகளை தொடங்கினர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிவிப்பு ஒன்று வெளியானது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.