
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்களையும், விராட் கோலி 47 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்ஏ அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி, 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா - ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் ரஹானே 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 61 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - எம் எஸ் தோனி இணை இறுதிவரை போராடி அணியை கரைசேர்க்க முயற்சித்தனர். இதில் தோனி 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா 42 ரன்களைச் சேர்த்திருந்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.