தோனி எப்போதுமே தனது வார்த்தையிலிருந்து பின் வாங்கமாட்டார் - காசி விஸ்வநாதன்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்னதாக வீரர்களின் ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது. அந்த வகையில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு இருந்தது.
Trending
இதில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றிய நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களை எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வெளியிட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் எம்.எஸ் தோனி தான் கேப்டனாக தொடர்கிறார் என்றும் உறுதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கடைசி கட்டத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்ட தோனி மைதானத்தில் சிரமப்பட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது.
அதோடு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மும்பை சென்ற அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது அதிலிருந்து மீண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியின் தலைவரான தோனி ஒரு வார்த்தையை வழங்கி உறுதி கொடுத்து விட்டால் அந்த வார்த்தையிலிருந்து எப்போதுமே பின்வாங்க மாட்டார். அந்த வகையில் அவர் ஏற்கனவே என்னிடம் அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஆயுத்த பணிகளை மேற்கொள்வதாக கூறிவிட்டார். எனவே நிச்சயம் தோனி தான் எங்களது அணிக்கு தலைமை தாங்குவார். தற்போது அவர் பிட்டாக இருப்பதாக நினைக்கிறேன். மேலும் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடருக்குள் முழுமையாக குணமடைந்து எங்களது அணியின் கேப்டனாக தொடர்வார். “தலைவன் எப்போதுமே தலைவன்” தான்” என தோனி விளையாடுவதை காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now