
16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது . குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன . நேற்று நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது . இந்த இறுதிப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணி நடப்புச் சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது . குஜராத் அணியும் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் முதலிடம் வகித்த குஜராத் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த அணி சென்னை அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .
நேற்று அகமதாபாத் நகரில் பெய்த கனமழையால் இறுதிப்போட்டி நடைபெறவில்லை . இன்று குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும் . குஜராத் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் .