
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவ்வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. கொல்கத்தா அணிக்கெதிரான ஒரு ஹோம் கேம் உட்பட இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமிருப்பதால் சென்னை அணியின் பிளே-ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டன் தோனி நீண்ட நேரம் பேட் செய்வதில்லை. ஆனாலும் அதிரடியாக ஆட்டத்தை அணுகி அமர்க்களப்படுத்தி வருகிறார். அவர் பேட்டிங் ஆர்டரில் சற்றே முன்னதாக களம் காண வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த சூழலில் நடப்பு சீசனில் தோனி தனக்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு வருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். டெல்லி அணி உடனான வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை பகிர்ந்துள்ளார்.