
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக விளையாடியவர் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே.
இவர் நடப்பு சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதோடு, சீசன் முழுதுமே அணிக்கு தேவையான வலுவான தொடக்கத்தை கொடுக்க இவர் தவறியதே இல்லை. இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சென்னை அணிக்கு சீசனின் அதிகபட்ச ஸ்கோரராக இருந்தார்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இந்நிலையில், 31 வயதான டெவோன் கான்வே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணி குறித்தும் நியூசிலாந்தின் விளையாட்டு ஊடகத்திடம் விவரித்துள்ளார்.