
கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அந்த தொடரின் இறுதியில் அடுத்த ஆண்டு நிச்சயம் நான் விளையாடுவேன் என்றும் நிச்சயம் சிஎஸ்கே அணி வலுவாக திரும்பும் என்றும் தோனி கூறியிருந்தார்.
அவர் கூறிய வார்த்தைக்கு ஏற்ப நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றை முதல் அணியாக உறுதி செய்தது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் புதிதாக இணைய உள்ளதால் வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியில் உள்ள சிறப்பான நான்கு வீரர்களை தக்க வைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.