
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 3 -0 என வெற்றிகரமாக முடித்தது. இதனையடுத்து இரு அணிகளும் டி20 தொடருக்காக தயாராகி வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையும் டி20 தொடருக்கான அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளதால் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மீண்டும் ஒரு இளம் படை களமிறங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே மைதானத்திற்கு சென்று தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீரர்களுக்கு திடீர் வருகையால் சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி. ஜார்க்காண்ட்-ல் உள்ள ராஞ்சி தான் தோனியின் சொந்த ஊராகும். அங்குள்ள மைதானங்களில் தான் விளையாடி வந்தவர். எனவே இந்த மைதானத்தில் எப்படி விளையாடினால் சிறப்பாக இருக்கும் என இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.