
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் முன்னேறின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷான் ஷராஃபு - கேப்டன் முகமது வசீம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலிஷான் ஷராஃபு 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஷ்னு சுகுமாறனும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் முகமது வசீம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 100 ரன்களில் முகமது வசீம் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் கான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிலால் கன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.