ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைடன்ஸும், கடைசி இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய நிலையில், 28 பந்தில் 43 ரன்களுக்கு ரஷீத்கானின் பந்தில் ஆட்டமிழந்தார்.
Trending
சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் ஸ்கோர் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில், பொல்லார்டு களத்திற்கு வந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. மந்தமாக பேட்டிங் ஆடிய பொல்லார்டு 14 பந்தில் 4 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் கடைசியில் டிம் டேவிட் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மும்பை இந்தியன்ஸுக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாச, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்த மும்பை அணி, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 52 ரன்களில் ஷுப்மன் கில் ஆட்டமிழக்க, 55 ரன்களில் சஹாவும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ரன் அவுட்டாகியும், சாய் சுதர்ஷன் 14 ரன்களில் ஹிட் விக்கெட் முறையிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற 9 ரன்கள் இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய டேனியல் சாம்சஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now