
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதனால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மே 26ஆம் தேதியுடன் நாடு திரும்ப வேண்டுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில் தொடரில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்து வீரர்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாடவுள்ளதால் அவர்களும் பங்கேற்பது கேள்விக்குறியாகவே உள்ளது.