இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - பாபர் ஆசாம் வருத்தம்!
இந்த தோல்வியின் மூலம் எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணி வீரர்கள் ஒரே ஓவரில் ஏழு ரன்கள் மேல் அடித்தால் நிச்சயம் போட்டியை வெல்வது மிகவும் கடினம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 263 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்தன. இதனால் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதினர்.
Trending
எனினும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து பெரும் மூன்றாவது டெஸ்ட் வெற்றியாகும்.
இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. எங்களுக்கு பொன்னான வாய்ப்பு இரண்டாவது இன்னிங்ஸில் கிடைத்தது. ஆனால் நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அனுபவ வீரர் ஹாரிஸ் ராவூஃப் காயம் காரணமாக முதல் இன்னிங்சில் வெளியேறினார். ஹாரிஸ் இல்லாமல் மற்ற வீரர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்ததாகவே நான் கருதுகிறேன்.
இந்த தோல்வியின் மூலம் எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணி வீரர்கள் ஒரே ஓவரில் ஏழு ரன்கள் மேல் அடித்தால் நிச்சயம் போட்டியை வெல்வது மிகவும் கடினம். எனினும் எங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது.இறுதி கட்டத்தில் நாங்கள் எங்களுக்குள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு நல்ல விஷயங்களும் நிறைய நடந்திருக்கிறது. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.பந்து வீச்சும் நன்றாகவே தான் இருந்தது” என்று தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பாபர் அசாம் கேப்டன்ஷிப் சரியாக செய்யவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் யுக்திகளை சரியாக கையாண்டு வெற்றி பெற்றார். ஆனால் பாபர் அசாம் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களத்தில் செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now