
இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்த சீசன் முழுவது தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரன்களை குவித்து வரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை இன்றும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதிலும் இந்த சீசனில் அடுத்தடுத்து 4 சதங்களை விளாசியிருந்த ஜெகதீசன் இன்றும் தனது ருத்ரதாண்டவத்தை தொடர்ந்தார். அவருக்கு துணையாக சாய் சுதர்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இப்போட்டியில் சதமடித்து எதிரணி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடவைத்து வருகின்றனர்.