
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அணியில் மாற்றங்களை செய்ததன் மூலம் 3ஆவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்து வெற்றி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், டேவிட் வார்னரை 17 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். 3 போட்டிகளில் (6 இன்னிங்ஸில்) 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அடுத்தப் போட்டியிலும் ஆஸி. அணி தோல்வியுற்றால் தொடரினை இழக்க நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வார்னரை அணியில் இருந்து விலக்கிவிட்டு கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.