இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத நடராஜன்; காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாகவே நடராஜன் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். அதேசமயம் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
Trending
சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வரும் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழ்நாடு வீரரான நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடர்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவுக்கு காயம் தீவிரமடைந்தது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் காரணமாகவும் இந்திய அணியில் ஏற்கெனவே பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் எனப் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாலும் நடராஜனால் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய அணியின் கூடுதல் வீரர்களாக அபிமன்யூ ஈஸ்வரன், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஸான் ஆகியோர் இங்கிலாந்து சுற்றும் பயணத்துக்குத் தேர்வாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now