
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்து பாகிஸ்தானுக்கு 450 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.