
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் மெல்போர்னில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்களும், இந்திய அணி 369 ரன்களும் எடுத்தன. அதன்பின் 105 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியானது 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் 13 ஆண்டுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதற்கு முன் இந்திய அணி மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் நாதன் லையன் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.