
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகாஸ்ட் 7ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் உலநலக்குறைவு காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட பந்துவீச வரவில்லை.