
சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் மிக முக்கிய இடங்களை பிடித்துள்ள அணிகளாக நேபாள் மற்றும் அமெரிக்கா ஆகியவை திகழ்கின்றன. சமீபத்தில் கூட நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்த அணிகள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில் நேபாள் அணியானது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் நேபாள் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நேபாள் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது டல்லாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் கேப்டன் மொனங்க் படேல் 2 ரன்னிலும், ஆண்ட்ரிஸ் கஸ் 2 ரன்னிலும், ஆரோன் ஜோன்ஸ் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த சாய்தேஜா முக்காமல்லா மற்றும் மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்காமல்லா அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் முக்காமல்லாவும் தனது விக்கெட்டை இழந்தார்.